முதல் காதல் அன்னக்கிளி - சாவி வேண்டாம்

 

முதல் காதல்

அன்னக்கிளி

சாவி வேண்டாம்

காற்று எப்போதும் போல் இல்லாது அன்று ஒரு விதமான குளுமையோடு இருப்பதாக தோன்றியது. நாடு முழுவதும் பரவி வரும் நோய் தொற்று காரணமாக அனைவரும் வீட்டினுள்ளேயே அடைபட்டு கிடந்த அந்த மாலை பொழுதினில் அந்த ஈரக்காற்று எல்லோர் மனதிலும் ஒரு இன்பத்தை எழச்செய்தது.

கடல் அலைகள் கரை சேருவதுபோல ஒன்று சேரும் மேகத்தின் அழகை எட்டாவது மாடியில் அவன் தனது அபார்ட்மென்ட்டின் ஜன்னல் வழியாக பார்த்து இரசித்துக்கொண்டிருந்தான். சென்னை மக்கள் அனைவருக்கும் மழை என்று சொன்னவுடன் இடி மின்னல் ஞாபகம் வருகிறதோ இல்லையோ, கண்டிப்பாக ராஜா பாட்டும் மிளகாய் பஜ்ஜியும் நினைவுக்கு வரும். ஃபேஸ்புக் வாட்சாப் போன்ற சமூக வலைதளங்களின் பிரதிபளிப்பு அது. எண்ணற்ற செய்தி தொலைகாட்சிகள் தரும் செய்திகளில் எது உண்மை எது பொய் என்று மண்டை குழம்பும் நேரத்தில் இவைகளில் வரும் பதிவுகளும் குறுஞ்செய்திகளும் “கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பழமொழியை “வாட்சாப்பில் வருவதும் பொய், ஃபேஸ்புக் பதிவுகளும் பொய், சோர்ஸ் இருப்பதே மெய்” என்றாகிவிட்டது.

மனிதர்களின் மனநிலை மிகவும் விசித்திரமாகிவிட்டது. எந்த சூழ்நிலையும் ஒரு சினிமா வசனமாக மாறுகிறது. மக்களின் மனதில் மீம் என்று அழைக்கப்படும் போன்மிகள் தான் எந்நேரமும் ஆதிக்கம் செய்கிறது. இயற்கை மறந்து, மொழி மறந்து, கலாச்சாரம் மறந்து, காதல் மறந்து, கண்ணியம் மறந்து, தான் யார் என்ற தேடல் மறந்து, தொலைபேசி அலைபேசியாகி, இன்று திறன்பேசி என்றாகிவிட்ட காலத்திலும் அத்தனையும் சலித்துப்போய் வீட்டில் அடைந்துகிடந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் அந்த மழை மேகம் ஒரு புத்துணர்வு நல்கியது.

பூட்டியிருக்கும் கதவு தானாக திறந்து யாரோ உள்ளே வருவதை அவன் கண்டான்.

“நா உள்ள இருக்கப்போ சாவி போட்டு உள்ள வராதனு எத்தன வாட்டி சொல்லிருக்கேன்....??” பொய்க்கோவத்தோடு அவளை அன்பாக கடிந்துக் கொண்டான் அவன்.

“மழை மேகத்தை பாத்ததும் உனக்கு மொளகா பஜ்ஜி சாப்ட தோணும்னு ரெடி  பண்ணி சுடசுட கொண்டுவந்தேன்.... வேணானா போ....” என்று கையில் இருந்த கிண்ணத்திலிருந்து ஒரு பஜ்ஜியை எடுத்து கடிக்க தொடங்கினாள் அவள்.  

சிறு புன்னகைக்குப் பிறகு பால்கனி நோக்கி இருவரும் நடந்தார்கள். மீண்டும் மேகக்கூட்டத்தின் அழகை இரசிக்கத் தொடங்கினார்கள்.

இருவரும் ஒரே குடியிருப்பில் எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் காதலர்கள். சென்னை மிகவும் மாறிவிட்டது. கடற்கரையும் கண்காட்சிகளும் என்றிருந்த காலம் எல்லாம் மாறி, தொழிற்சாலைகள், ஐ.டி. கம்பெனிகள் என்றாகிவிட்டது. காலம் மாற கட்டமைப்பும் மாறியது, குடிகளும் மாறினார்கள், கலாச்சாரமும் மாறியது. காலத்திற்கு ஏற்றாற்போல் மாறாதது அழிந்துபோகும் என்பது உண்மையே, ஆனால் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறியதால் அழிந்தது கலாச்சாரம் மட்டும்தான். 

“வீட்ல போன் பண்ணாங்களா...??”

“ம்ம்ம்...”

“என்னவாம்...?”

“இங்க இருந்தப்பலாம் ஒரு சுடுதண்ணி வச்சிருக்கியா நீ?? அங்க மட்டும் மொளகா பஜ்ஜி செய்ற அளவுக்கு வந்துட்டனு கிண்டல் பண்ணாங்க”

“யாரு... என் மச்சினிச்சிதான??”

“இல்ல... உன் மாமியாரு...”

ஒரு நிமிடம் பஜ்ஜி தின்பதை நிறுத்திவிட்டு மேகத்தின் அழகை மறந்து அருகிலிருந்த அழகைப் பார்த்தான்.

நாணத்தில் அவள் முகம் சிவக்க...!

கர்வத்தில் அவன் மனம் நிறைந்து...!

கண்வழியே காதல் அனல் பறந்தது...!

எத்தனையோ மாறியும் காதலிற்கு எதிர்ப்பு மட்டும் இன்னும் இச்சமுதாயத்தில் மாறவில்லை என்று பலர் புலம்பும்போதிலும், பெற்ற குழந்தைகள் மனமகிழ்வு மிகமுக்கியம்! வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும்! அப்படி துணைநிற்பவர்கள் ஒருவரின் உறக்கத்தில் மற்றவரின் கனவுகளை சுமந்து வாழ்வில் இருவரும் வெற்றிபெற உறுதுணையாய் இருக்கவேண்டும்! இதில் எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்பதை நன்குணர்ந்த பெற்றோர்கள் அமைந்தது இருவரும் செய்த புண்ணியம்.

காதலை பரிமாறிக்கொண்ட முதல் நாளே இருவரும் தனது வீட்டில் சொல்லி சம்மதம் பெற்றனர். மதம், ஜாதி, ஜாதகம் என்ற எல்லா கேள்விகளும் வந்தது. வேலை, பணம், எதிர்காலம் என்ற எல்லா பயமும் கிளர்ந்தது. அத்தனையும் தாண்டி தன் பிள்ளைகள் தெளிவான முடிவெடுத்துள்ளார்கள் என்ற நம்பிக்கையை இருவரும் தனது பெற்றோருக்கு கொடுக்க முடிந்தது. ஒரே அபார்ட்மெண்ட், எதிரெதிர் பிளாட், மிளகாய் பஜ்ஜி எல்லாம் வீட்டிற்கு தெரியும். இதுவும் காலமாற்றத்தின் ஒரு வரம்தான்.


அவள் மனதை வென்றாகிவிட்டது. ஆனால் குடும்பத்தார் மனதை வெல்வது என்பதை நினைக்கும்போதெல்லாம் சிறிது பயமாகவே இருந்தது. எதிர்பார்த்ததை விடவும் மிக சுலபமாக இவன் பாசவலையில் அனைவரும் விழுந்தனர். அவள் தங்கைதான் முதலில் இவன் பாசத்தால் பாதிக்கப்பட்டாள். “மாமா... மாமா” என்று அவள் தினம் ஒருமுறையேனும் அலைபேசியில் பேசிவிடுவாள். அவள் அப்பாவிற்கு தன்மகளின் சந்தோஷம்தான் மிகமுக்கியம். எனவே அவனை ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுத்தார். ஆனால் பேசிப்பழகிய பிறகு மருமகன் என்ற பாசமும் மரியாதையும் உண்டாயிற்று. அம்மா மட்டும் சிறிது தூரமாகவே இருந்து வந்தாள். இன்று அவளும் சிறிது நெருங்கி வருகிறார் போலும் என்ற ஆனந்தம்தான் இருவர் முகத்திலும் பளிச்சிட்டது.

தொடரும்..!

தொடர்ந்து படிக்க - 2. அம்மாவின் ஆசை

முதல் காதல் -  அன்னக்கிளி

  1. சாவி வேண்டாம்

  2. அம்மாவின் ஆசை

  3. இதுதான் இயல்பா??

  4. தொடரும் அதிசயங்கள்

  5. என்னுடைய தோழி

  6. முதல் காதல்

  7. கிரீம் பண்

  8. மழைச் சாரல்


__________________________________________

இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments